மாயமாவதற்கு முன் காஃபி டே உரிமையாளர் எழுதிய தற்கொலை கடிதம்….

காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா மாயமாவதற்கு முன் கழுதிய தற்கொலை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

காஃபி டே நிறுவனத்திற்கு சொந்தகாரரும், கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எஸ்.எம்ஃகிருஷ்ணாவின் மருமகனுமான 58 வயதுடைய வி.ஜி சித்தார்த்தா நேற்று மாலை காணாமல் போனார்.

நேற்று காரில் சிக்மங்களூரு – மங்களூரு சென்றுக் கொண்டிருந்த சித்தார்த்தா, நேத்ராதி ஆற்றுக்கு அருகே காரை நிறுத்தும் படி டிரைவரிடம் கூறி இறங்கி சென்றுள்ளார். சிறிது தூரம் நடந்து சென்ற சித்தார்த்தா காணாமல் போயுள்ளார்.

கார் டிரைவர் தகவல் அளிக்க, விஷயம் பரவியது. சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், யாரோ ஒருவர் ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்ததை பார்த்தாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது, நேத்ராதி ஆற்றில் சித்தார்த்தாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்தார்த்தா எழுதிய தற்கொலை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முயற்சிகள் இருந்த போதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.

ஒரு தனியார் நிறுவன பார்ட்னர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும் படி எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி இன்று மீண்டு வந்துள்ளேன். சில நாள்களுக்கு முன்பு என் நண்பரிடமிருந்து அதிகளவிலான பணம் கடனாக பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 37 ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறேன். மேலும் 20 ஆயிரம் பேருக்கு தொழில்நுட்பக் கம்பெனி மூலம் வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். நிறுவனத்தின் அதிக பங்குகளை வைத்திருக்கும் என்னால், கம்பெனியை லாபகரமாக இயக்க முடியவில்லை.

இவ்வளவு பெரிய நிறுவனத்தை லாபகரமாக இயக்குவதில் நான் தோற்று விட்டேன். உங்கள் அனைவரையும் கைவிட்டு விட்டு செல்வதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் நிறைய போராடி விட்டேன். நான் ஒரு நண்பரிடம் ஏராளமாக கடன் வாங்கி, கடந்த 6 மாதத்தில் பாதிப் பங்குகளை மீட்டேன். ஆனாலும், என்னால் இந்த சூழ்நிலையில் இருந்து மீள முடியவில்லை.

வருமான வரித் துறையின் முந்தைய டைரக்டர் ஜெனரல், இரண்டு சமயங்களில் எங்கள் பங்குகளை முடக்கி வைத்து மிகவும் கொடுமைப்படுத்தினார். மைன்ட்ரீ டீலை பிளாக் செய்ததுடன், பங்குகளை மீட்கவும் முடியாமல் செய்து விட்டார்.

எனது தவறுகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன். கம்பெனியின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் நானே காரணம். எனது கம்பெனி ஆடிட்டர்கள், நிர்வாகிகள் யாரையும் இதற்கு பொறுப்பேற்க வைக்கக் கூடாது. அனைத்து பரிமாற்றங்களுக்கும் சட்டம் என்னையே பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும்.

நான் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோற்று விட்டேன். என்னை ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நிறுவனத்தின் அனைத்து சொத்துகள், அவற்றின் தற்போதைய மதிப்பு குறித்து பட்டியலிட்டுள்ளேன். புதிய நிர்வாகத்தில் அனைவரும் சிறப்பாக பணியற்ற வாழ்த்துகிறேன் என எழுதியுள்ளார்.

காஃபி டே நிறுவனத்துக்கு 7000 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலர்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.