(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். எனினும் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்தவர் மீண்டும் போட்டியிட கூடாது என்று தனக்கும், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கூடாது என்று கோத்தபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயது 35 ஆக அதிகரித்தமை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை மையப்படுத்தியேஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிக சூட்சமமான முறையில் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே இன்றைய அரசியல் அதிகார பிரச்சினைக்கு பிரதான காரணம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் சூட்சமமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றியுள்ளார். ஆகவே அதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.