ஆற்றில் மிதந்து சென்ற மிகப்பெரிய கட்டிடம்!

தென்மேற்கு சீனாவில் யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சீனாவின் யாங்சே ஆற்றின் மீது 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இணையதளவாசிகள் வேடிக்கையான பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அறிக்கையின்படி, நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், நதிகளைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில் அகற்றப்பட்ட 106 கட்டிடங்களில் இந்த கட்டிடம் ஒன்றாகும்.

இந்த கட்டிடத்தில் மின்சார வசதி எதுவும் கிடையாது. இரண்டு கப்பல்களில் உதவியுடன் யாங்சே ஆற்றின் குறுக்கே நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை சீன சர்வதேச செய்தி சேனலான சிஜிடிஎன் யூடியூப்பில் பகிர்ந்துள்ளது. கட்டிடம் உண்மையில் மிதக்கும் உணவகம் என்றும், கொள்கை மாற்றங்கள் காரணமாக அதை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் விரும்பியதாக அது குறிப்பிட்டுள்ளது.

பல பயனர்கள் ட்விட்டரில் அதிர்ச்சியையும் பிரமிப்பையும் வெளிப்படுத்தியிருந்தாலும், மிதக்கும் ஹோட்டல்களும், உணவகங்களும் சீனாவில் மிகவும் பொதுவானவை என்பதால் இது புதிதல்ல என அந்நாட்டு பயனர்கள் தெரிவித்துள்ளனர்.