அமெரிக்காவில் ஆசிரியர் உள்ளிட்ட சக மாணவர்கள் ஐவரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சாலை விபத்தில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ கோல்டன். கடந்த 1998 ஆம் ஆண்டு வெறும் 11 வயதேயான இவர் தமது சக மாணவர்கள் நால்வரையும் ஆசிரியர் ஒருவரையும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.
இவருக்கு உதவிய 13 வயதான மிட்செல் ஜான்சன் என்பவரும் தண்டனை பெற்று சிறார்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டனர்.
தண்டனை காலம் முடிந்து 2007 ஆம் ஆண்டு தமது 21 ஆம் வயதில் விடுதலையான ஆண்ட்ரூ கோல்டன் தனது பெயரை ட்ரூ கிராண்ட் என மாற்றிக் கொண்டு மிசூரி மாகாணத்தில் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் மனைவி மற்றும் மகனுடன் ஆர்கன்சாஸ் நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றில் பயணித்த ட்ரூ கிராண்ட் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்தில் கிராண்ட் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த மனைவி மற்றும் அவரது மகனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆர்கன்சாஸ் பாடசாலையில் நடந்த அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அரசாங்கம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு 150 மில்லியன் டொலர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.