குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாதங்களேயான கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி இன்று (30) காலை உயிரிழந்த சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் மட்டுவில் தெற்கு சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த விமலதாசா இராஜரோகினி வயது(37) இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணி பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. உயிரிழந்தவர் கடந்த 27ம் திகதி மாலை 5.00 மணியளவில் தனது இரண்டு பிள்ளைகளையும் தனியார் கல்வி நிலையத்துக்கு அழைத்து சென்று மீண்டும் திரும்பியுள்ளார்.
இதன்போது மட்டுவில் தெற்கு பகுதியில் மேல் மாடி வீட்டில் கூடு கட்டியிருந்த குளவி காற்றுக்கு கலைந்து பிள்ளைகள் இருவர் உட்பட இவரையும் தூரத்தி துரத்தி தாக்கியுள்ளது. பிள்ளைகள் இருவரும் ஒடி தப்பியுள்ள நிலையில் குறித்த பெண் அதிக தூரம் ஓட முடியாததன் காரணமாக கடுமையான குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அதே வழியில் வந்த நபர் ஒருவர் அம்புலன்ஸ் வாகனத்தினை வரவழைத்துள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த அம்புலன்ஸ் வாகனம் குளவி கொட்டிய பெண்ணை காப்பாற்றாமல் மீளவும் திரும்ப செல்ல முற்பட்டுள்ளது. இதன் போது ஊர்மக்கள் ஒன்று கூடி வீதியின் நடுவில் நின்றுஅம்புலனஸ் வாகனத்தை மறித்து பெரும் பிரயத்தனத்தின் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த கர்ப்பிணி பெண் இன்று(30) காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இவரது இறப்பால் மட்டுவில் பகுதி பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை அண்மையில் அச்செழு பகுதியில் கோவில் ஒன்றில் கூடு கட்டியிருந்த குளவிகள் காற்றினால் கலைந்து கொட்டியதில் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.