காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா சடலமாக கண்டெடுப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

காஃபி டே நிறுவனத்திற்கு சொந்தகாரரும், கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எஸ்.எம்ஃகிருஷ்ணாவின் மருமகனுமான 58 வயதுடைய வி.ஜி சித்தார்த்தா ஜூலை 29 மங்களூரில் காணாமல் போனார்.

காணாமல் போன காஃபி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜூலை 31 புதன்கிழமை கர்நாடகாவின் தக்ஷின மாவட்டத்தின் துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 31 அதிகாலையில் ஹொய்கேபஜார் அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மீனவர் தலைவரும் பனம்பூர் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான யதிஷ் பைகாம்படியும் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தா காணாமல் போன சில மணிநேரங்களில் வெளிவந்த கடிதத்தில், நிதி சிக்கல்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகளிடமிருந்து வந்த தொந்தரவு ஆகியவையே அவரை இந்த நிலைமைக்கு வழிவகுத்தன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடிதத்தில் சித்தார்த்தா கையொப்பம் குறித்து வருமான வரித்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது. எவ்வாறாயினும், இந்த கடிதம் சித்தார்த்தாவின் குடும்ப உறுப்பினர்களால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்கவில்லை என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.