ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள ‘Once upon a time in Hollywood’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் புரூஸ் லீ-யின் பாத்திரத்தை மோசமாக சித்தரித்துள்ளதாக, அவரது மகள் கொந்தளித்துள்ளார்.
பிரபல நடிகர்கள் லியானர்டோ டிகாப்ரியோ-பிராட் பிட் ஆகியோரது நடிப்பில் ‘Once upon a time in Hollywood’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை க்வெண்டின் டொரண்டினோ இயக்கியுள்ளார்.
1960 காலகட்டத்தில் நடப்பது போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் ஹாலிவுட்டில் புரூஸ் லீ அறிமுகமாகியிருந்தார். எனவே அவரது கதாபாத்திரத்தை வைத்து காட்சிகள் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், புரூஸ் லீ சம்பந்தப்பட்ட ஒரு காட்சி அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, புரூஸ் லீ-யின் மகள் ஷனான் லீ ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
‘படத்தில் நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் லியானார்டோ டிகாப்ரியோ இருவருமே ஆன்டி ஹீரோக்கள் என்பதும், படத்துக்காகத்தான் என் தந்தையை இப்படி சித்தரித்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.
புரூஸ் லீ போன்ற ஒரு வீரனை அடிப்பதற்காகத்தான், பிராட் பிட்டை இவ்வளவு கொடூரமானவராகக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் ரேசிஸம் போன்ற விடயங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவர் உயிருடன் இருந்தபோது, ஹாலிவுட் அவரை எப்படி நடத்தியது என அனைவருக்கும் தெரியும்.
புரூஸ் லீ எப்படிப்பட்டவர், அவர் எப்படி வாழ்ந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். திரையரங்கில் என் தந்தையைப் பார்த்து பார்வையாளர்கள் சிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது பாத்திரத்தை நாசம் செய்துவிட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.