லண்டனில் இருந்து ஊருக்கு வந்த தாயை மார்பில் குத்தி கொன்றது ஏன்?

லண்டனில் இருந்து ஊருக்கு வந்து பெற்ற தாயை கொலை செய்தது ஏன் என கைதான மகன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63). சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் திகதி ரத்தினம் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பொலிசார் விசாரணையில் சொத்துப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் லண்டனிலிருந்து வந்திருந்த அவரது மகன் பிரவீன், தாய் ரத்தினத்தை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை பொலிசார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பொலிசாரிடம் பிரவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வெளிநாட்டில் மென்பொருள் டிசைனிங் சம்பந்தபட்ட வேலை செய்து வந்தேன்.

சிறுவயது முதலே எனக்கும், எனது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அவர் என்னை சரியாக கவனித்துக்கொள்ள மாட்டார்.

இதனால் எனக்கு எனது அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. என் தந்தையின் ஈமச்சடங்கில் கூட எனது பேச்சை கேட்காமல் அவர்கள் விருப்பப்படியே செய்தார்கள். இதனால் நான் அவருடன் சரியாக பேசுவது கிடையாது,

பிரித்தானியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பினேன். எனக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்று விருப்பம் இருந்ததால் சென்னையில் எனது தாயார் தங்கி இருந்த வீட்டை எனது பெயருக்கு மாற்றித்தரும்படியும், அதை விற்று விட்டு வெளிநாட்டுக்கு செல்லப் போவதாகவும் அவரிடம் கூறினேன்.

ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை, இதனால் அவர் உயிருடன் இருக்கும் வரை எனக்கு சொத்து கிடைக்காது என தெரிந்ததால் எனது தாயாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி ஏப்ரல் மாதம் 14-ம் என் தாய் ரத்தினம் வீட்டுக்கு சென்று அவரை கீழே தள்ளினேன்.

பின்னர் அவர் அசையாதவாறு இருக்க அவரது கை, கால்களை கட்டிவிட்டு கத்தியால் மார்பில் குத்தினேன். இதில் ரத்தம் பீறிடவே அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் திட்டமிட்டபடி அங்கிருந்து பாலவாக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சத்யஜோதி வீட்டுக்கு சென்று குளித்து விட்டு, சென்டிரல் சென்றேன். அங்கிருந்து ரெயில் மூலம் புவனேஸ்வர் சென்றேன். அங்கு பூரி ஜெகநாதர் கோவில் அருகே ஒரு வாரம் தங்கிவிட்டு அங்கிருந்து டெல்லி சென்று தங்கி இருந்தபோது பொலிசார் என்னை கைது செய்து விட்டனர் என கூறியுள்ளார்.