ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, ஐ.நா.சபையின் பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானின் கந்தகார்-ஹிராத் நெடுஞ்சாலையில், பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு மீது சென்ற அரசு பேருந்து ஒன்று வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நாவின் பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் கூறுகையில்,
‘பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.