பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட சிரமமாக இருப்பதால், பொலிஸார் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட அனுமதிக்க வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து நளினி ஒரு மாத கால பரோலில், கடந்த 25ம் திகதி வெளியில் வந்தார்.
இந்நிலையில், நீதிமன்றின் உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் நளினி மனு ஒன்றை கையளித்துள்ளார்.
“தினமும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட சிரமமாக உள்ளது. எனவே வீட்டிற்கே பொலிஸார் வந்து கையெழுத்து பெற்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
அத்துடன், மகள் திருமணம் குறித்து பேசுவதற்காக சிறையில் உள்ள தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று நளினி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து சத்துவாச்சாரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழகுராணி கருத்து வெளியிடுகையில்,
“சிறையில் இருந்து பரோலில் வந்த நளினி தினமும் காலை 10 மணிக்கு சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பரோலில் வந்துள்ளார்.
தற்போது பொலிஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட கடினமாக உள்ளது. கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை சிறைத்துறையிடம் தான் அளிக்க வேண்டும். ஆனால் அவர் பெறுநர் முகவரியில் மாவட்ட எஸ்.பி. என்று குறிப்பிட்டுள்ளதால் எஸ்.பி.யிடம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.