வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக கடல் தொழில் திணைக்களத்தில் தேடுதல் நடவடிக்கை பிரிவு இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது.
இதற்குமைவாக எதிர்வரும் சில தினங்களில் கடல் தொழிலில் ஈடுபடும் அனைத்து கடல் தொழிலாளர்களுக்கும் இந்த காலநிலை தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு, வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த எச்சரிக்கையின் மூலம் கடல் தொழிலாளர்கள் தெழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று சர்வதேச கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வள்ளங்கள் இந்த தாழ் அமுக்க நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு காலநிலை எதிர்வுகூறலுக்கு அமைவாக உடனடியாக பாதுகாப்பு பிரதேசத்துக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கடல் தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தல் காற்றின் வேகம் அடிக்கடி 55 கிலோமீற்றர் தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். இந்த பிரதேசங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை ஏற்படும் பொழுது இந்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த கடல் பிரதேசம் தற்காலிகமாக கொந்தளிப்புடன் காணப்படக்கூடும்.
கடல் தொழிலாளர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வழிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.