உலக வரைபடத்தில் க்ரீன்லாந்தைப் பார்த்ததுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அழகிய பனிப்படலங்கள். ஆனால் அந்த அழகுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்கம் க்ரீன்லாந்திலும் எதிரொலித்துள்ளது. இதன் விளைவாக பனிப்படலங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உருகிவருகின்றன.
கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மட்டும் சுமார் 12 லட்சம் கோடி (12 billion tonne) அளவிலான பனிப்படலங்கள் உருகியுள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். க்ரீன்லாந்தில் ஆராய்ச்சியில் உள்ள காலநிலை விஞ்ஞானிகளும், செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்களும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருக்கின்றன.
வடக்கு அட்லாண்டிக் – ஆர்டிக் கடல் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது கிரீன்லாந்து. கிரீன்லாந்தில் 82% பகுதி பனியால் சூழப்பட்டிருக்கும்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஓகஸ்ட் மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தின்போது அங்கு பனிப்படலம் உருகுவது வழக்கம்.
இந்த காலகட்டத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தவிர உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் இங்கு குவிவது வழக்கம். தட்பவெப்ப மாறுதல் குறித்த ஆராய்ச்சிகளுக்காக அவர்கள் இங்கு வருவர்.
இந்த முறையும் அதுபோல் க்ரீன்லாந்தில் கள ஆய்வில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “இதுவரை கடந்த 2012-ல் தான் மிக அதிகமான அளவில் க்ரீன்லாந்தில் பனிப்படலங்கள் உருகின. அதன் பின்னர் 2019 ஜூலை 31ல் அதிக அளவில் பனிப்படலங்கள் உருகியுள்ளன. மொத்த பரப்பளவில் 60% உருகும் நிலையில் இருக்கிறது. அதாவது 60% பனிப்படலங்களின் மேல்பரப்பில் 1 மி.மீ அளவு உருகியுள்ளது. இதனால் 12 லட்சம் கோடி (12 billion tonne) பனிப்படலங்கள் உருகி தண்ணீராக மாறி சமுத்திரத்தில் கலந்து உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர். டேனிஷ் போலார் ஆராய்ச்சி மையம் நடத்தும் போலார் போர்டல் என்ற இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து க்ரீன்லாந்தில் ஆராய்ச்சியில் உள்ள டேனிஷ் வானிலை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் ரூத் மோட்ரம் கூறும்போது, “ஜூலை மாதம் மட்டும் பனிப்படலங்கள் உருகியதால் 197 பில்லியன் தொன் தண்ணீர் அட்லான்டிக் பெருங்கடலில் கலந்துள்ளது” என்றார்.
இது கடல்மட்டத்தை ஒரே மாதத்தில் 0.1 மில்லிமீட்டர் அளவுக்கு உயர்த்திவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு மில்லிமீட்டர் கடல்மட்டம் உயரும்போதும் கடலோரப் பகுதிகளுக்கு புயல், சூறாவளி அச்சுறுத்தல் அதிகமாகிறது.
கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி மார்கோ டெடெஸ்கோ, “பனிப்படலத்தின் மேல்பரப்பு உருக்கம், கோடையில் பனிப்படலங்களில் மேல் படந்திருக்கும் பனிக்கட்டியின் அளவு குறைதல் ஆகிய காரணிகள் இந்த ஆண்டு க்ரீன்லாந்து பகுதி கடல்மட்டம் உயர அதிகமாக பங்களிப்பு செய்யச் செய்திருக்கிறது” என்று கூறினார்.
இந்த புள்ளிவிவரங்கள் சர்வதேச அளவில் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
This is a roaring glacial melt, under the bridge to Kangerlussiauq, Greenland where it’s 22C today and Danish officials say 12 billions tons of ice melted in 24 hours, yesterday. pic.twitter.com/Rl2odG4xWj
— Laurie Garrett (@Laurie_Garrett) August 1, 2019