திருமணமான 20 நாளில் கணவனை தீயிட்டு கொளுத்திய மனைவி கைது!

தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசிய கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி நேற்று கைது செய்யப்பட்டார்

திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி மாரியம்மா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதுபதி (25) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர், புதுச்சேரியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் முருகவேணியை அவரது தாயார் குமுதாவிடம் சேதுபதி பெண் கேட்டுள்ளார். தாயாரின் வற்புறுத்தலின் பேரில் முருகவேணி கடந்த 20 தினங்களுக்கு முன்பு சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, தினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சேதுபதிக்கும், முருகவேணிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற சேதுபதி, நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மதியம் 2 மணிக்கு, சேதுபதியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.

3 மணியளவில், சேதுபதி வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருக்கும் போது, வீட்டின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, முருகவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், உள்ளே இருந்த சேதுபதி தீயில் சிக்கிக்கொண்டு வெளியில் வருவதற்குப் போராடியுள்ளார். ஆனால், அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அவர் வெளியில் வர முடியாமல், தீயில் சிக்கிக்கொண்டார்.

இதனிடையே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ கூரை முழுவதும் பரவியதால், தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு அலுவலர் சந்தானகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனி பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் சேதுபதி முற்றிலுமாக தீயில் கருகி உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சேதுபதி தூங்கிக்கொண்டிருக்கும் போது, முருகவேணி கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டு, சென்றுள்ளார். அவர் சென்ற சற்று நேரத்தில், கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சேதுபதி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என விசாரனையில் தெரிந்தது.

சேதுபதியைக் கொலை செய்த அவரது மனைவி முருகவேணி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சேதுபதியைக் கொலை செய்தது குறித்து முருகவேணி போலீஸாரிடம் கூறுகையில், திருமணமானது முதல் கஞ்சா மற்றும் குடிபோதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாலும்,, தன்னையும், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வந்தததால் பொறுக்க முடியாமல் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸார் முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.