மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ஜனாத் பேகம் படேல். இவர் தனது கணவர் இம்தியாஸ் குலாம் படேல், அவரின் குடும்பத்தினருக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவித்துள்ளார்.
ஜனாத் பேகம் படேல்(31) நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த நவம்பர் மாதம் நான் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்தேன். என் கணவர் வேறு ஒருபெண்ணுடன் வாழ்ந்துகொண்டு எனக்கு வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வாயிலாக மூன்று முறை தலாக் கூறி என்னுடன் வாழ மறுத்தார். அவர் தலாக் கூறியதும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் வயிற்றியில் இருந்த குழந்தை குறைமாதத்துடன் பிறந்தது.
என் கணவர் தொலைபேசியிலும், வாட்ஸ் அப்பிலும் முத்தலாக் கூறியதைத் தொடர்ந்து நான் அவருக்கு எதிராக முத்தாலாக் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அப்போது அவசரச் சட்டமாக இருந்ததால், அதில் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்கினார்கள்.
புதிதாக முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமானது. இதைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் அவுரத் இ ஷாரியத் ஆலோசனையின்படி, நான் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் என் கணவர் மீது புதிய புகாரை அளித்தேன். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நான் புனித குர்-ஆனுக்கு எதிரானவர் இல்லை. ஆனால் உரிமைக்காகப் போராடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
மும்பையில் உல்ள மும்ப்ரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுக்கூர் காட் கூறுகையில், “வாட்ஸ் அப்பில் முத்தலாக் கூறியதாக ஜன்னத் பேகம் அவரின் கணவர் இம்தியாஸ் படேல் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரை மீண்டும் புதிகாக அளித்து மீண்டும் நடவடிக்கை எடுக்கக் கூறினார். இதையடுத்து, இம்தியாஸ் படேல் மீது புதிய முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 498, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் இம்தியாஸின் தாய் ரேஹன்னா ஹூசைன் படேல், தங்கை சுல்தானா குலாம் படேல் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.