மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு – 20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் நேற்றைய தினம் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆரம்பமான இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிரோன் பொல்லார்ட் 49 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 20 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டத்துடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் நவ்டீப் சைனி 3 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும், கலில் அஹமட், குருனல் பாண்டியா, ஜடேஜா மற்றும் வோசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
96 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 24 ஓட்டத்தையும், தவான் ஒரு ஓட்டத்தையும், விராட் கோலி 19 ஓட்டத்தையும், ரிஷாத் பந்த் டக்கவுட்டுடனும், மனீஷ் பாண்டே 19 ஓட்டத்தையும், குருனல் பாண்டியா 12 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஜடேஜா 10 ஓட்டத்துடனும், வோசிங்டன் சுந்தர் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கொர்ட்ரல், சுனில் நரேன், கீமோ போல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் 1 :0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளதுடன், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்று இரவு 8.00 மணிக்கு புளோரிடாவில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.