வெளிநாட்டில் வசித்த மனைவி.. உள்ளூரில் பெண்ணை மயக்கிய கணவன்.!

தமிழ்நாட்டில் திருமணமானதை மறைத்து வேறு பெண்ணுடன் பழகி அவரை ஏமாற்றி வந்த மோசடி நபர் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவையை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் ரேவதி.

இவர் கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்த நிலையில் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரேவதி தனியாக வசித்து வந்ததோடு ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனியார் நிறுவனத்தில் ரேவதி பணிபுரிந்து வந்த சூழலில் இன்ஸ்டாகிராமில் கேரளாவைச் சேர்ந்த ஜிதின்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பு ரேவதியுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த ஜிதின்ஷா இன்ஸ்டாகிராம் மூலம் மீண்டும் நட்பைப் புதுப்பித்துள்ளார்.

அவரிடம், தனது கணவரைப் பிரிந்த சோகங்களையும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தையும் பகிர்ந்துள்ளார் ரேவதி.

அப்போது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி ஜிதின்ஷா அவருடன் நெருக்கமானார்.

ஒரு கட்டத்தில் அவரை மணக்க முடிவெடுத்த ரேவதி, இது குறித்து நேரில் ஜிதின்ஷாவிடம் மனம் விட்டுப் பேசிய நிலையில் இருவரும் கணவன்- மனைவியாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் முறைபடி திருமணம் செய்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்ற ஜிதின்ஷா, பல்வேறு காரணங்களைக் கூறி ரேவதியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றார்..

இந்நிலையில், ரேவதிக்கு அமெரிக்காவில் இருந்து பேஸ்புக்கில் அறிமுகமான சின்னுஜேக்கப் என்பவர், தான் ஜிதின்ஷாவின் முதல் மனைவி என்றும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரேவதி ஜிதின்ஷாவுடன் சண்டை போட்ட நிலையில், அவர் ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தலைமறைவானார்.

இந்நிலையில், மீண்டும் ரேவதியை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட சின்னுஜேக்கப், ஜிதின்ஷா பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், விரைவில் துபாய் செல்ல இருப்பதாகவும் கூறினார்.

இது குறித்து ரேவதி பொலிசில் புகார் அளித்தார், அதில் ஜிதின்ஷா, வெளிநாட்டில் வேலை தேடி வருவதாகவும், வேலை கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் எனவும் கூறி தன்னை ஏமாற்றியதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில் தலைமறைவாக் இருந்த ஜிதின்ஷாவை கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் புதிய தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.