குழந்தை பிறந்தது முதலே வலியால் துடித்த தாய்… 6 நாட்களில் நடந்தேறிய சோகம்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர் செய்த குளறுபடியால் 5 நாட்கள் வலிதாங்க முடியாமல் அவஸ்தையடைந்த தாய் கைக்குழந்தையை தவிக்கவிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான தனுஸ்ரீ என்கிற நிறைமாத கர்ப்பிணி பெண், வழக்கம் போல தன்னுடைய தந்தையுடன் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

ஆனால் அந்த நேரத்தில் பணிக்கு வரவேண்டிய மகப்பேறு மருத்துவர் ரவீந்திர தவால், பணியில் இல்லை. இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில், அவர் தனியாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருவதால் அங்கிருக்கலாம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

உடனே தனுஸ்ரீ தவால் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு தந்தையுடன் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், தனுஸ்ரீக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு 40,000 ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார்.

இதற்கு தனுஸ்ரீயின் தந்தையும் சம்மதம் தெரிவித்து 23-ஆம் திகதியன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், தனுஸ்ரீக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அன்றிலிருந்தே தனுஸ்ரீயின் அடிவயிற்று பகுதியில் வலி எடுக்க ஆரம்பித்துள்ளது. வாந்தியும், பேதியுமாக தனுஸ்ரீ பெரும் அவஸ்தையடைந்துள்ளார். 27ம் திகதியன்று வலி அதிகரித்ததால், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

28ம் திகதி சிகிச்சை மேற்கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவருடைய அடிவயிற்றில் பருத்தி துடைப்பத்தை வைத்து தைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனுஸ்ரீயின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம், சம்மந்தப்பட்ட மருத்துவரை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.