ரத்து செய்யப்பட்ட விமானம்: ஆத்திரமடைந்த பயணிகள்

ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் மது அருந்திவிட்டு விமானத்தை இயக்க சென்ற இரண்டு விமானிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளாஸ்கோ விமான நிலையத்திலிருந்து நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கிற்கு UA162 என்கிற விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு புறப்பட இருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் விமானத்தை இயக்கவிருந்த 61 மற்றும் 45 வயதான இரண்டு விமானிகள் மது அருந்திவிட்டு விமானத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் உடனடியாக 2 விமானிகளையும் கைது செய்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து விமானம் ரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பயணிகள் தங்களுடைய கோபத்தினை ட்விட்டரின் வாயிலாக விமான நிர்வாகத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு விமானிகளும் வரும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதேபோன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தை மது அருந்திவிட்டு இயக்க முயன்ற, பால் கிரெபெங்க் (35) மற்றும் அவரது சகாவான கார்லோஸ் ராபர்டோ லிகோனா (45) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 10 மற்றும் 15 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.