அதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது  தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.  அங்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“அதிபர் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முதலில் அதிபர் தேர்தலில்  போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும்.

அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்”  என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம்.

ஆனால், ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு” என கூறினார்.