ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக தீடீரென 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சுற்றளவுக்காக ஜம்மு காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதையடுத்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவி வரும் பதற்றம் தொடர்பாக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநகர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்தநிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். மேலும் சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவையம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தார், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார் இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.