பறக்கும் விமானத்திலிருந்து குதித்து பலியான பிரித்தானிய இளம்பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக மடகாஸ்கரைச் சேர்ந்த மக்கள் பசு ஒன்றை பலியிட இருக்கிறார்கள்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவியான Alana Cutland (19), 3,700 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து பலியானார்.
அவர் நண்டுகள் தொடர்பான project ஒன்றை செய்து கொண்டிருந்ததாகவும், மலேரியா வந்ததால் அந்த project-ஐ செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், மலேரியா மருந்துகளின் தாக்கத்திலிருந்த Alanaவுக்கு சித்த பிரமை ஏற்பட்டு, தான் project-ஐ முடிக்காவிட்டால் பொலிசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என கற்பனை செய்து, அஞ்சி, பறக்கும் விமானத்திலிருந்து குதித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் பரிதாபத்திற்குரிய விதமாக பிரித்தானிய அரசோ, மடகாஸ்கர் அரசோ, Alanaவின் உடலை தேடும் முயற்சியை தொடரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் Alanaவுக்கு சம்பந்தமே இல்லாத மடகாஸ்கரைச் சேர்ந்த ஆறு கிராமங்களிலுள்ள சுமார் 400 பேர், அவரது உடலைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காக களமிறங்கினார்கள்.
துரதிருஷ்டவசமாக, பத்து நாட்களாக தேடியும் Alanaவின் உடல் கிடைக்கவில்லை. என்றாலும் சோர்ந்து போகாத அந்த கிராம மக்கள், Alanaவின் உடலைக் கண்டுபிடிப்பதற்காக தங்கள் தெய்வங்களின் உதவியை நாடியுள்ளார்கள்.
அதற்காக அவர்கள் கருப்பு வெள்ளை நிறம் கொண்ட ஒரு பசுவை பலியிட இருக்கிறார்கள்.
இதற்கு முன் சில சம்பவங்களில் அந்த பலியிடுதல் உதவியுள்ளதாக தெரிவிக்கும் அந்த கூட்டத்தின் தலைவர், அதையே இம்முறை Alanaவின் உடலை தேடுவதில் முயற்சி செய்து பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த பசுவை பலியிட்டு விட்டு, அவர்கள் Alanaவின் உடலை தேடச் செல்வார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, அந்த பசுவின் உடல் அவர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இது, தங்களுக்கு, தங்கள் தெய்வங்களின் உதவியை பெற்றுத்தரும் என அந்த கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இதில் நெகிழ்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அரசாங்கங்களே உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில், மீனவர்களாகவோ, ஹொட்டல் ஊழியர்களாகவோ வேலை செய்து, மாதம் ஒன்றிற்கு வெறும் 25 முதல் 100 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்த மக்கள், Alanaவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையிலும், தங்கள் நேரத்தை செலவிட்டு, உடலை வருத்தி பல மைல்கள் நடந்து அவரது உடலை தேடுவதுதான்.