அமெரிக்காவில் Wi-Fi கடவுச்சொல்லுக்காக அக்காவை கழுத்தை நெரித்துக்கொலை செய்த தம்பிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கெவோன் (18) என்கிற சிறுவன் தினம் தோறும் வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடும் பழக்கமுடையவன்.
வீட்டிலிருந்த Wi-Fi-ஐ அனைவரும் பகிர்ந்து கொண்டதால் வீடியோ கேம் விளையாடுவதற்கு சிரமாக இருந்துள்ளது. ஒருநாள் பள்ளி முடிந்து வேகமாக வந்த வீட்டிற்கு வந்த கெவோன் மற்றவர்கள் வருவதற்கு முன்பாகவே வீட்டின் Wi-Fi கடவுச்சொல்லை மாற்றிவிட்டு, வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பித்துள்ளான்.
அப்போது வீட்டிற்கு வந்த அவனுடைய அம்மா கடவுச்சொல்லை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெவோன், தன்னுடைய அம்மாவை நோக்கி வேகமாக சென்றுள்ளான். இதனை தடுப்பதற்காக உடனே அவனுடைய சகோதரி அலெக்சஸ் (19) உள்ளே குறுக்கிட்டுள்ளார்.
தரையில் விழுந்து இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த போதே, அலெக்சஸின் கழுத்தில் கை வைத்த கெவோன் 15 நிமிடங்கள் விடாமல் வைத்து அழுத்தியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களுடைய தாய் வேகமாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததும், கழுத்தில் இருந்த கையை கெவோன் எடுத்துள்ளான்.
சுயநினைவில்லாமல் கிடந்த அலெக்சஸை மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கெவோன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, கெவோன் ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.