மது அருந்தியதால் பரிபோன 12 உயிர்… வியாபாரியின் வீட்டின் முன் குவிந்த உறவினர்கள்!

மீரிகம பிரதேசத்திலுள்ள பல்லேவல எனும் கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்கள் சட்டவிரோத கசிப்பு அருந்தியதால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மது அருந்தியவர்கள் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே பன்னிருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடலங்களை சுடலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் கசிப்பு வியாபாரியின் வீட்டின் முன் உடலங்களை கொண்டுவந்த ஊரவர்கள் அவற்றை தெருவில் வைத்து கோஷமிட்டனர்.

அவ்வாறு ஒரே நேரத்தில் இரு உடலங்களை இருவேறு தெருக்களால் ஊர்வலமாக கொண்டுவந்த மக்களே குறித்த வியாபாரிக்கு எதிர்ப்புக் காட்டினர்.

அங்கு எதிர்ப்புக்காட்டியவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

காஞ்சன என்ற நபர் இக்கிராமத்தில் பத்து மேற்பட்ட வருடங்களாக சட்டவிரோத மது வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றார். அவர் அதனை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பொலிஸார் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர்.

பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள செல்கின்றபோது அம்முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதும் இல்லை. இன்று இறுதியாக ஒரே நேரத்தில் 12 பேர் இறந்ததானால் பெரிதாக பேசப்படுகின்றது. ஆனாலும் இந்த வியாபாரத்தால் மாதந்தோறும் இங்கு மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது என்றனர்.

இதை தொடர்ந்து பல்லேவெல பொலிஸ் நிலைத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் றுவான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.