உயிருக்கு போராடும் குழந்தை.. காப்பாற்றவிடாமல் பெற்றோர்களை தடுக்கும் என்.எச்.எஸ்

பிரித்தானியாவில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர், என்.எச்.எஸ் என்றழைக்கப்படும் தேசிய சுகாதார சேவை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் நியூஹாம் நகரைச் சேர்ந்த ஷெலினா, 39, மற்றும் அவரது கணவர் முகமது, 45, இந்த தம்பதிகளின் 5 வயது தஃபிதா ரகீப் என்ற பெண் குழந்தை மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில், லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாது என லண்டன் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற உதவுவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள காஸ்லினி குழந்தைகள் மருத்துவமனைக்கு ரகீப்பை மாற்ற பெற்றோர்கள் என்.எச்.எஸ்-யிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், என்.எச்.எஸ் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை உடைய பெற்றோர், தேசிய சுகாதார சேவை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்கள் வழக்கை அடுத்த மாதம் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கின்றனர், மேலும் வழக்கறிஞர்களுக்கு செலுத்த 1,00,000 டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.