இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று காலமானார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2014 முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார்.
1998-ம் ஆண்டு டெல்லி முதலமைச்சராகவும் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார். இந்தியாவின் 2-வது பெண் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
25 வயதில் எம்.பி.யாகி இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி வரை சுஷ்மா சுவராஜ் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மா சுவராஜ் அரசியல் பயணம்
சுஷ்மா சுவராஜ், வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தெரிவு செய்யப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி பதவி ஏற்றார்.
அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.
2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.
சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.
1973 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
மே 2008 – 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.
2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.
வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார்.
சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் போட்டியிடாமல் தவிர்த்தார்.