அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தமிழ் யுவதியொருவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த வாணிசிறி ராஜசேகரன் என்ற 18 வயது யுவதி விடுத்துள்ள இந்த வேண்டுகோளில், தான் மருத்துவம் அல்லது சட்டத்துறையில் பயின்று அவுஸ்திரேலிய சமூகத்துக்கு உதவி செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாகவும், இந்நிலையில், தகப்பனின் சுகவீனம் காரணமாக , தமது குடும்பத்தினரின் விசாவை நிராகரித்துள்ள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்னும் மூன்று கிழமைகளில் தம்மை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தாய், தகப்பன் மற்றும் தனது தம்பியுடன் அவுஸ்திலியாவிற்கு சென்ற வாணிசிறி மெல்பேர்ன் தென்மேற்கு புறநகர் பகுதியில் கடந்த ஆறுவருடங்களாக சிறந்த மாணவியாகவும் பலதுறைகளில் தேர்ச்சி மிக்கவராகவும் விளங்குகின்றார்.
வாணிசிறியின் குடும்பம் நிரந்தர வதிவிட உரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வாணிசிறியின் தந்தைக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்தே தமக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
28 நாட்கள் காலக்கெடு வழங்கியிருக்கும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் அறிவிப்பின்படி, எதிர்வரும் 21ம் திகதி அவர்கள் சிங்கப்பூருக்கு திரும்பி செல்லவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளார்கள்.
வாணிசிறி எதிர்வரும் உயர்கல்விப்பரீட்சையில் தோற்றவுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் நாடுகடத்தப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் , கையெழுத்துப்போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தின் மனதை மாற்றி தங்கள் குடும்பத்தின் கடைசிநேர கோரிக்கையை நிறைவேற்றுமாறு பொதுமக்களிடம் வாணிசிறி உதவிகோரியுள்ளார்.