ட்வீட்டர் மூலமாக ரசிகர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. அது என்னவென்றால் தங்கள் மனதில் பட்டதை எந்த பிரபலத்திடமும் அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்பதுதான். அதில் பல சமயம் ஏழரைகளும் நடப்பதுண்டு. அப்படித்தான் இந்த சம்பவமும்.
பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் வருண் தவான். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர். சமூக வலைதளங்களிலும் இவரைப் பின் தொடர்பவர்கள் அதிகம். கடந்த வாரம் வெளியான ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ ஹாலிவுட் படத்தைப் பாராட்டி வருண் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“ஹாப்ஸ் அண்ட் ஷா’ பார்த்தேன். அரங்கில் மிகவும் குஷியாக இருந்தது. ராக் சிறப்பாக நடித்திருந்தார். சமோவ கலாச்சாரத்துக்கு அவர்கள் தந்திருந்த மரியாதை பிடித்திருந்தது. லண்டன் துரத்தல் காட்சிதான் மிகச்சிறப்பு” என்று வருண் பதிவிட்டார். இதற்கு அக்ஷய் என்பவர், “ஹாலிவுட் படங்களுக்கு விளம்பரம் தந்து அமெரிக்கர்களுக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் நடிக்கும் மசாலா படங்களுக்குப் பதிலாக நமது படங்களின் தரத்தை உயர்த்துங்கள்.
கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடியுங்கள். கவனம் இல்லாம போகும் நல்ல பாலிவுட் படங்களை விளம்பரப்படுத்துங்கள். இந்தியாவைப் பெருமைப்படுத்துங்கள். வருண் தவாண் மற்றும் கரண் ஜோஹர்” என்று பதில் அளித்திருந்தார்
உடனே அவருக்குப் பதில் சொன்ன வருண், “நீங்கள் மற்றவர்களுக்கு இப்படியான விஷயங்களைச் சொல்ல நினைக்கும்போது உங்கள் ப்ரொஃபைல் படமாக ஹாரிபாட்டரின் படம் இருக்கக்கூடாது மகனே. போய் உறங்கு போ” என்று குறிப்பிட்டார். வருணின் இந்த பதில் நெட்டிசன்களை சிரிக்க வைத்ததோடு தேவையில்லாமல் நட்சத்திரங்களிடம் வம்பிழுப்பவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் காட்டும் விதமாகவும் இருந்தது. யாருகிட்ட..!