அப்போ நான் சின்ன பொண்ணு, என்னனு தெரியாமலே அந்த படத்தில் நடிச்சிட்டேன்!

சமீபத்தில் ஜோதிகாவுடன் ரேவதி இணைந்து நடித்த ‘ஜாக்பாட்’ படம் வெளியானது. இந்தப் படம் சம்பந்தமான புரோமோஷனில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் ரேவதி.

அப்படித்தான் ஒரு நிருபர் அவரிடம், “நடிக்க வந்த இரண்டாம் வருடத்திலேயே ‘புதுமைப் பெண்’ படத்தில் நடித்ததை இப்போது நினைத்துப் பார்ப்பதுண்டா?” எனக் கேட்டதற்கு பதிலளித்த ரேவதி, “அந்தப் படத்தில் நடித்தபோது எனக்குப் பதினேழு வயது. அந்தக் கதையில் நடிக்கிற அளவுக்கு அன்றைக்கு எனக்கு வயதும் இல்லை; வாழ்க்கை அனுபவமும் இல்லை.

நான் 20 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்க வேண்டிய படம் அது. பாரதிராஜா நடித்துக் காட்டியதை திரும்ப நடித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்கென்று சிந்தனை ஏதுமில்லாத சிறிய வயதில் நடித்த அந்தப் படத்தை அசலான பெண்ணியப் படம் என்பேன்.

நான் சினிமாவில் நுழைந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த முதல் பத்துப் பன்னிரண்டு படங்கள் எனது அதிர்ஷ்டம். அவையே தமிழ் சினிமாவில் திடமான அஸ்திவாரத்தை எனக்குப் போட்டுக்கொடுத்தன. தொடக்கத்திலேயே பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் எனச் சாதனை படைத்தவர்களின் படைப்புகளில் எனக்கு இடம் கிடைத்தது.

என்னை நடிக்க வைத்த ஒவ்வொரு பெரிய இயக்குநருமே தங்களுக்கென்று ஒரு பாணியைக் கொண்டவர்கள். அவர்களிடம் பயின்றதால்தான் பின்னால் இயக்குநராகவும் பரிமாணம் அடைய முடிந்தது. எனக்கானதைத் திரை உலகில் என்னால் செய்ய முடிந்தது. அந்த வகையில் தமிழ் சினிமா எனக்குக் கொடுத்தது நிறையதான்” என பதில் அளித்து தனது மலரும் நினைவுகளை மீட்டியிருக்கிறார். அது ஒரு பொற்காலம்.