சென்னையில் கோடீஸ்வர தொழிலதிபரை கொன்று சடலத்தை கடலில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ், (50).
கோடீஸ்வர தொழிலதிபரான இவர் திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவருக்கு சொந்தமாக வணிகவளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், அவற்றின் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை வந்துள்ளது.
ஜூன் 21ல், பரத்வாஜ் திடீரென மாயமானார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர். அதில், பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு, காசிமேடு கடலில், உடல் வீசப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் பிரீத்தி என்பவர் தலைமறைவான நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர்.
கொலை குறித்து முன்னர் பொலிசார் கூறுகையில், பரத்வாஜ், தன் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் ஒருவரின் அழகில் மயங்கினார்.
அவரை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் அது முடியாமல் போனது.
இதையறிந்த வழக்கறிஞர் பிரீத்தி (35) அந்த பெண்ணை பணிய வைப்பதாக கூறி, பரத்வாஜிடம் பல மாதங்களாக, 65 லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.
ஆனால், பரத்வாஜ் நினைத்தது நடக்காததால், பிரீத்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
சம்பவத்தன்று, பிரீத்தி காசிமேடுக்கு பரத்வாஜை வரவழைத்து பிரகாஷ், சுரேஷ், மனோகர், ஆகியோருடன் படகில், கடலுக்குள் அனுப்பி வைத்தார்.
படகில் மூவரும் சேர்ந்து பரத்வாஜை கொலை செய்து, உடலை கடலில் வீசினர் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரீத்தி தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அடையாறு இந்திரா நகரில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர்.
திருமணமான பிரீத்தி தனது கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.