திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதி!

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த ஒரு பெண்ணின் துணைவர் எதிர்பாராமல் உயிரிழக்க, அவருக்கு நேர்ந்த கதி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்து, திருமணத்தின் முக்கியத்துவத்தை உரக்கக் கூறியுள்ளது.

திருமணம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணரவே இல்லை, Paolo இறக்கும் வரை என்கிறார் Gill Lavery (42).

39 வயதில் ஒரு நாள் திடீரென இறந்து போனார் பிரித்தானியாவைச் சேர்ந்த Paolo. Cheshireஇல் வேலை செய்த Paolo, வார இறுதி நாட்களில் Surreyயில் வசிக்கும் தனது துணைவி Gill Laveryயையும், மகன் Connorஐயும் (17 மாதங்கள்) பார்ப்பதற்காக வருவார்.

எட்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்த நேரத்தில், ஒரு நாள் Cheshireஇல் இருந்து தொலைபேசியில் அழைத்தார் Paolo.

தனக்கு உடல் நலமில்லை என்று அவர் தெரிவிக்க, ஓய்வெடுக்கும்படி அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார் Lavery.

ஆனால் மறுநாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை. அவரது அலுவலகத்திற்கு அழைத்த Lavery, அவர் அங்கும் செல்லவில்லை என்று தகவல் வரவே, உடனடியாக Cheshireக்கு புறப்பட்டுள்ளார்.

Cheshireஇல் உள்ள Paoloவின் வீட்டை நெருங்க, அங்கு பொலிசார் நிற்பதைக் கண்டதும், சொல்ல முடியாத அளவுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது Laveryக்கு. வீட்டிற்கு செல்லும்போது, அவர் பயந்ததுபோலவே, Paolo தனது படுக்கையில் இறந்து கிடந்திருக்கிறார்.

கண்ணீரும் கம்பலையுமாய் உறவினர்களுக்கு Lavery தகவல் கொடுக்க, ஒரு வழியாக இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்திருக்கின்றன.

பின்னர் Lavery, தனது துணைவரின் இறப்பை அரசாங்கத்தில் பதிவு செய்யப்போகும்போதுதான், தான் எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பது அவருக்கு புரிந்திருக்கிறது.

எந்த அலுவலகத்திற்கு சென்றாலும், அவர்கள் Laveryயைப் பார்த்து கேட்ட ஒரு கேள்வி, நீங்கள் யார் என்பதுதான்!

ஆம், எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும், மகனது பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இருந்தாலும், இருவரும் சேர்ந்து வீடு ஒன்றை வாங்கியிருந்தாலும், Laveryயும் Paoloவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கவில்லை!

கணவனிடமிருந்து மற்றும் விதவை என்கிற முறையில் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்துப் போயிருக்கிறார் Lavery.

அத்துடன், எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகும், அவரது பிள்ளைக்கு தாயான பிறகும், Paoloவின் வாழ்வில் தனக்கு இடமில்லை என்று தெரியவந்தபோது, அதை ஜீரணிக்க முடியவேயில்லை Laveryயால்.

Paoloவை முறைப்படி திருமணம் செய்து கொண்டிருந்தால், அவரது விதவை என்கிற முறையில், Laveryக்கு அவரது கணவரின் கடைசி சம்பளம் முதல், உதவித்தொகைகள் வரை என்னென்னவோ நன்மைகள் கிடைத்திருக்கும்.

பிரித்தானியாவில் 1.25 மில்லியன் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் நிலையில், தற்போது, தான் சந்திக்கும் தம்பதிகளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் Lavery, ஏனென்றால் அவர் அனுபவித்த, அனுபவிக்கும் வேதனை அவருக்கு மட்டும்தான் தெரியும்.