காஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டு தகவல் தொடர்பு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவசர தகவல்களை உடனடியாக தெரவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு காஷ்மீரில், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு பிராந்தியம் முழுவதும் ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இணையம் தடைசெய்யப்பட்டது, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது, தகவல் தொடர்பு சேவைகள் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 வதை நீக்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நான்காவது நாளாக காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீரியர்கள் பிராந்தியத்தில் உள்ள உறவினர்களின் நிலை குறித்து அறிய தொடர்புக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த விபத்தில் காஷ்மீர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தகவல்தொடர்பு நிறுத்தப்பட்டுள்ள காரணமாக ஸ்ரீநகரில் உள்ள அவரது குடும்பத்தினரை யாரும் அணுக முடியவில்லை. இப்போது அவரது நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளனர்.
இது போல் பல அவசர மற்றும் முக்கிய தகவல்களை உடனடியாக தெரிவிக்க முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.