“இந்திய அணியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்”

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் நிறுவனம் அனுப்பிய கடிதத்திற்கு சவுரத் கங்குலி எடுமையாக எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இரட்டை பதவிகள் மூலம் ஆதாயம் பெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

சச்சின், கங்குலி, லக்ஷ்மன் உள்ளிட்டோரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தனர். தற்போது இதே குற்றச்சாட்டிற்காக டிராவிட்டுக்கு பி.சி.சி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆதாயம் தரும் இரு பதவிகளில் டிராவிட் இருக்கிறார் என அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து விளக்கமளிக்க டிராவிட்டிற்கு 2 வாரங்கள் கால அவகாசம் பி.சி.சி.ஐ. தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் டிராவிட்டிற்கு நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக சவுரத் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பி.சி.சி. ஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாய குற்றச்சாட்டு புதிதாக முன்வைக்கப்படுகிறது. செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி, இந்திய அணியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ராகுல் டிராவிட்டிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றுள்ளார்.

கங்குலியின் இந்த கருத்தை ஹர்பஜன் சிங் வரவேற்று, இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை விட சிறந்த நபர் கிடைக்க மட்டார். இதுபோன்ற ஜாம்பாவன்களுக்கு கடிதம் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.