உங்களுக்கு வயசாயிடுச்சு என சொல்லாமல் மூத்த வீரர்களை வெளியே அனுப்பிய கிரிக்கெட் போர்டு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2019 2020 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தபட்டியல் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சி அளித்தது.

இதனை அடுத்து அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பில் இருந்த இன்சமாம் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் க்ராண்ட் பிளவர் என அனைவரையும் மறு ஒப்பந்தம் செய்யாமல் நீக்கம் செய்தது.

இந்நிலையில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த பட்டியலில் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் பட்டியலில் 33 வீரர்கள் இடம் பெற்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 19 வீரர்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளார்கள். அதுவும் முதல் பிரிவில் மூன்றே மூன்று வீரர்களுக்கு மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் தற்போது மூத்த வீரர்களாக இருக்கும் சோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் இருவரும் உலகக்கோப்பை அணியில் ஆடிய நிலையில் தற்போது அவர்கள் இடம் பெறாதது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி வாசிம் கான், ஒப்பந்த பட்டியல் கடந்த ஒரு ஆண்டாக வீரர்களின் செயல்பாடு, உடற்திறன் மற்றும் எதிர்வரும் தொடர்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு உயரிய நிதி மதிப்பை அளிப்பதாகவும், மேலும் இந்த வீரர்களை தாங்கள் முழுமையாக நம்பிக்கையுடன் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிவு ஏ – பாபர் அசாம், சர்பராஸ் அகமது மற்றும் யாசிர் ஷா

பிரிவு பி – ஆசாத் ஷபிக், அசார் அலி, ஹரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், முகமது அப்பாஸ், சதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் வஹாப் ரியாஸ்

பிரிவு சி – ஆபிட் அலி, ஹசன் அலி, ஃபக்கர் ஜமான், இமாத் வாசிம், முகமது அமீர், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் மற்றும் உஸ்மான் ஷின்வாரி