எனக்கு அதிர்ஷ்டம் இல்லை – பஸில்

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார். கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக் கண்டு எவரும் அச்சப்படத் தேவையில்லை.” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலங்களில் விட்ட தவறுகள், குறைபாடுகளைச் சீர்செய்து நாட்டைப் பாதுகாத்து புதிய பாதையில் செல்ல வேண்டிய நேரம் எழுந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டுக்கு வருமாறு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்களுக்கு ஆதரவை வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும், திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார். கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் வழிகாட்டலின் கீழ் ஆட்சி முன்னெடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெறவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சியை அமைப்போம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடன் நாங்கள் எந்தத் தொடர்பையும் வைக்கமாட்டோம். ஆனால், என் மீதும் வீண்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெள்ளை வானில் நீதிமன்றம் கொண்டுசென்றனர். நாம் யோசித்து முடிவெடுப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்தால் வெற்றிபெறுவோம் என்றும் இல்லை; தோல்வியடைவோம் என்றும் இல்லை. ஆனால், எல்லாக் கட்சிகளையும் இணைத்துப் போட்டியிட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது எம்.பி. பதவியோ இல்லாமல் போகுமானால் அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. மஹிந்த எப்போதும் மக்கள் மனதில் உள்ளார். அவர் மக்கள் தலைவர்.

சர்வதேச ரீதியாக நாங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம். உலக நாடுகள் பலவற்றுடன் இராஜதந்திர ரீதியில் நாங்கள் நெருங்கிச் செயற்படுகின்றோம்.

தோட்ட மக்களின் பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் பலவற்றை கடந்த ஆட்சியில் நாங்கள் தீர்த்தோம். தபால் விநியோகம் , மின் விநியோகம் , உட்கட்டமைப்பு வசதிகள் செய்தோம். காணிப் பிரச்சினை ஒன்று இருந்தது. தொழிலாளர்கள் சம்பள விடயத்தில் நாங்கள் முழுக் கவனம் செலுத்துவோம்” – என்றார்.