திமுகவில் முன்னாள் தலைவரும், மறந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி இறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் மறைந்த நாளில் சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில், 30 டன் எடையில் கருணாநிதி அமர்ந்து எழுதுவதை போல நிறுவப்பட்ட வெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வரான மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். அதன் பின்னர் மெரினாவில் இருக்கும் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பொதுக்கூட்ட நிகழ்வு அருகே இருந்த ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது. இந்த நினைவு தின பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைரமுத்து, தி.க.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி உரையாற்றினார் அந்த உரையில், ‘கருணாநிதி தமிழகத்திற்கு தகப்பனை போன்றவர். அவர் தொடர்ந்து மாநில சுயாட்சிக்காக போராடினார்.
உதய சூரியன் திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னம். திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் அதிபுத்திசாலி. அவரது மகனுக்கு உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைத்து இருக்கின்றனர்.
பெங்கால் மொழியில் உதய் என்றால் ரைசிங் (rising) என அர்த்தம்’ என்று அந்த உரையில் விளக்கமளித்துள்ளார். மம்தாவின் இந்த பேச்சை கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ரசித்து சிரித்தனர். இதனை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மட்டும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து மதிமுக பொது செயலாளர் வைகோ இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. இதன் காரணமாக வைகோவின் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கும், வைகோவிற்கும் இடையேயான வார்த்தை போர் கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.