கோத்தபாய வீட்டில் இரவில் சுமந்திரன்!

நேற்று முன்தினம் இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தில் நேரில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அன்றைய தினம் மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தனுடனான சந்திப்பின் பின்னர், எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசினார் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த கோத்தபாய, ஜனாதிபதியான பின்னர் எப்படியும் இனப்பிரச்சனையை தீர்க்கவுள்ளதாகவும், தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் ஜனாதிபதியாகினால், தனக்கு சர்வதேச அங்கீகாரம் ஒன்று கிட்டுமென்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு இலங்கையில் சாத்தியமில்லையென்பதை எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்தார் கோத்தபாய, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடியதாக இருந்த இந்த அரசின் ஆரம்பத்தில் ஏன் அதை செய்யாமல் ஐ.தே.க தவிர்த்தது என்றும் கேள்வியெழுப்பினார் கோத்தபாய.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குறிப்பிட்ட கோத்தபாய ராஜபக்ச, தான் வாக்குறுதியளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில தினங்களில் தமிழ் தரப்புக்களுடனான சந்திப்பில் பேசப்பட்ட – தனது தீர்வின் உள்ளடக்கங்களையும்- இதன்போது, கோத்தபாய விளக்கமளித்தார்.

13வது திருத்தத்தில் காணி – பொலிஸ் அதிகாரங்கள் சாத்தியமில்லை ஆனால் அவ் அதிகாரத்திற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை கண்டு முழுமையாக அமுல்படுத்துவேன் என்று இதன்போது வாக்குறுதியளித்தார்.

சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இந்த கலந்துரையாடல் நீடித்தது. இதன்போது, கலந்துரையாடப்பட்ட மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வெளியிடவில்லை.

எனினும், இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வார இறுதியில் கோத்தபாய சந்திப்பார் என புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

அதனுடன் தமது சந்திப்பு முடிந்த பிற்பாடு சுமந்திரனது சந்திப்பு இடம் பெற்றதால் என்ன கதைத்தது என்பது தொடர்பில் தெரியாது எனக் குறிப்பிட்டார்.