வேற்று மதத்தினர் மீது பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய கவனம் செலுத்த தவறியுள்ளதாக இலங்கை மெத்தோடிஸ்த சபையின் பேராயர் ஆசிரி பி.பெரேரா ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
மையங்கணை பகுதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபைக்குள் புகுந்து பௌத்த பிக்குமார்கள் நடத்திய தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பதுளை மாவட்டத்தின் – மஹியங்கனை மெத்தடிஸ்த திருச்சபைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்த மூன்று பௌத்த பிக்குகள் அந்த சபையின் ஊழியம் செய்யும் நபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பேராயர்,
“இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியானது கண்டி சங்கசபைக்கு உட்பட்ட பகுதி என்று நினைக்கின்றேன். உண்மையிலேயே வெட்கத்தை விடவும் மிகவும் கவலையடைகின்றேன்.
எசல என்கிற மிகவும் புனிதமான கலாசாரத்துடனான பெரஹர நடத்தப்படுகின்ற இந்த தருணத்தில் பௌத்த மதம் அல்லாத கிறிஸ்தவ ஊழியம் செய்யும் நபர் மீது தாக்குதல் நடத்தியமை மிகவும் வெட்கமடைகின்ற செயலை விடவும் கவலைக்குரிய செயலாகும்.
ஏன் இப்படியான புனிதமான காலத்திலும் இவ்வாறான ஈனச்செயலை செய்வதற்கு சில மதத்தைச் சேர்ந்த தலைவர்களும் பிக்குமார்களும் மேற்கொண்டார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
எசல பெரஹர நடத்தப்படுகின்ற இந்த காலகட்டத்தில் பிக்குமார்கள் வந்து இன்னுமொரு மதத்தைச் சேர்ந்த ஊழியம் செய்கின்ற நபர் மீது தாக்குதல் நடத்துவது தகுதியற்ற செயலாகும்.
கவலைக்குரிய விடயமாகும். இதுகுறித்து மகாநாயக்க தேரர்களும் இதுகுறித்து ஆராய்ந்துபார்க்க சந்தர்ப்பம் உள்ளது.
இதேவேளை கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக அநுராதபுரம் பகுதியிலுள்ள மெத்தோடிஸ்த சபை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முறையிட்டிருப்பதாகவும் கூறினார்.
பிரதமரிடம் முறையிடுவதா அல்லது ஜனாதிபதியிடம் முறையிடுவதா என்பது முக்கியமல்ல. யார் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதே முக்கியமாகும்.
அதனால் பிரதமரிடம் முறையிட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து நாம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இந்த விவகாரம் ஜனாதிபதி அறிந்திருக்க மாட்டார் என்று கருதமுடியாது. ஏனென்றால் சமூக வலைத்தளத்தில் நான் பதிவிட்டுள்ள நிலையில் சர்வதேசம் வரை அது சென்றிருக்கிறது. எனவே ஜனாதிபதி இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்துவைத்திருப்பார் என்றே நினைக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.