ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது. இந்திய அரசின் முடிவுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளையும் தற்காலிகமாக துண்டித்து கொள்வதாகவும் அறிவித்தது.
மேலும் பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் அறிவித்தார்.
இதனால் வெகுண்டெழுந்த இந்திய சினிமா தொழிலாளர் சங்கம், இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட அனைவரையும் உடனடியாக தடை செய்யுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் அனுப்பியுள்ள அறிக்கையில், இந்திய சினிமா, திரைப்படத்துறையில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளை பிரதமர் மோடி உடனடியாக தடை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.