தமிழகத்தில் வேலூர் தேர்தலில், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. திமுக இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் வகித்தது.
இதில் ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 8,141. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.
இதனால் திமுக 47.3 சதவீத வாக்குகளையும், அதிமுக 46.51 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63 சதவீத வாக்குகளையும் பெற்றது.
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 8,141 என்கிற நிலையில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்ததில், நாம் தமிழர் கட்சி முக்கியப் பங்கு வகித்துள்ளது.