மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன்னுடைய உரையில், காங்கிரஸை மிகக் கடுமையாக சாடி இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “வைகோ பேச்சில் உள்நோக்கம் இருக்கின்றது. காங்கிரஸ் பங்கேற்கின்ற கூட்டணியில் இருந்து கொண்டே, காங்கிரசையே விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்ற செயல்.” என தெரிவித்தார். என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “வைகோ அமித் ஷா சொல்லி பேசியிருக்கிறார் என்னும்போது அவர் கூட்டணியின் மிகப்பெரிய துரோகி” என கடுமையாக குற்றம் சாட்டினார். இதற்கு வைகோ கடும் ஆத்திரமடைந்து பல்வேறு குற்றசாட்டுகளை அவர்களது மீது வாரி இறைத்தார். இதன் காரணமாக திமுக தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை, “வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டை போட ஆரம்பித்து இருக்கின்றனர். வைகோ கூறுவதில் சில கருத்துக்கள் இருந்தாலும் அவர் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படும் வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்பொழுது காங்கிரஸைக் குறை கூறுவது சரியில்லை. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் இருக்கத்தான் செய்கிறது.” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “பொருந்தாத கூட்டணி அமைத்ததால் மறுபடியும் இன்று சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு பாஜக தான் காரணம் என கூறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. ” என வர தெரிவித்துள்ளார்.