யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளமையினால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாடாளுமன்ற ஆசனங்கள் ஐந்தாக குறையும் என யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம அலுவலர் பிரிவுகளின் பெருமளவு வாக்காளர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்களை தாயகத்திலுள்ள உறவினர்கள் மூலம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் வலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் வாழ்வோர் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் கிராம அலுவலர்கள் பணியகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர், விண்ணப்பிக்காதவர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில் 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல் மீளாய்வு செய்யப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு குறைவடைந்தால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 ஆசனங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.