பாலத்தில் தொங்கிய சடலங்கள்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி….

மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தில் பாலம் ஒன்றில் 9 பேரின் சடலங்கள் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் கடந்த 2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரை போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

தங்களுக்கு போட்டியாக செயல்படும் எதிர்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களை கொன்று சாலையோரத்தில் உடல்கள் குவிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.

தற்போது, இதுபோன்ற சம்பவம் மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தின் உருவாபன் என்ற நகரில் நடந்துள்ளது.

இங்குள்ள பாலம் ஒன்றில் 9 பேரின் சடலங்கள் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தன. இதன் அருகே, சாலையோரத்தில் 10 பேரின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டும், சிலர் தூக்கில் தொங்கவிடப்பட்டும், சிலர் அரை நிர்வாண நிலையிலும் கொல்லப்பட்டு இருந்தனர்.

இந்த உடல்களுக்கு அருகே இருந்த பதாகை ஒன்றில் ‘ஜலிஸ்கோ’ என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தொடக்க எழுத்துக்கள் மட்டும் எழுதப்பட்டிருந்தன.

இது ‘வயாகரா’ என்ற மற்றொரு கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருந்தது. ‘தியாகியாக இரு, ஒரு வயாகராவை கொல்லு’ என அந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

இது போன்ற தாக்குதல்கள் மெக்சிகோவில் மீண்டும் அதிகரித்து விட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.