மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம்….. பிரித்தானியாவிலிருந்து யாழ் சென்றவர்கள் ஆயுதம் வைத்திருந்தார்களா?

பிரித்தானியாவில் இருந்து யாழ்.குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்பிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்களின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொலிஸார் சுற்றுலாவாசிகள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பிரித்தானியாவில் இருந்து யாழ்.குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்பிற்கு சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு நேற்று முன்தினம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர்.

உல்லைப்பிரதேசத்திற்கு நேற்று சுற்றுலா சென்று திரும்பியவர்கள் காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்தனர்.

இதன் போது வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பில் சிலர் அங்கு கருத்துகள் கூறிய போது, சுற்றுலா சென்றவர்கள் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் மட்டக்களப்புக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 119 ஊடாக பொலிஸாருக்கு ,சுற்றுலா வந்தவர்களின் வானின் இலக்கம் வழங்கப்பட்டு அந்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவர்களிடமோ அல்லது அவர்கள் சென்ற வானிலோ சந்தேகப்படும்படியான பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அத்துடன், சுற்றுலா சென்றவர்களின் வான் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது