இந்தியாவிலேயே முதன் முறையாக, நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் குறித்து இந்திய ரயில்வே சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோவை, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ‘நீருக்கு அடியில் ரயில் பாதை அமைப்பது என்பது தலைசிறந்த இன்ஜினியரிங் பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு அடையாளமாக இந்த ரயில் இருக்கும். இந்தியாவிலேயே முதன் முறையாக, நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை நாட்டு மக்கள் பெருமையாக உணர்வார்கள்’ என கருத்து பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தாவின் உப்பு ஏரி பகுதி மற்றும் அவுரா உப்பு ஏரி மைதான ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் விதமாக மொத்தம் 16 கிலோ மீற்றர் தூரத்திற்கான இந்த ரயில் பாதை, ஆற்று நீர் உள்ளே கசியாத அளவிற்கு 4 அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
5 நிறுத்தங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தில், முதல் 5 கிலோ மீற்றர் வரையிலான ரயில் சேவை இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.






