பொலிஸ் அதிகாரிகளால் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?

மட்டக்குளி கதிரானவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்று உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபர் வீடு ஒன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் பிரதேச மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்குளி, கதிராவத்த பாம் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் அதிகாலை 1.45 மணியளவில் நுழைந்துள்ளார்.

இதன்போது வீட்டில் இருந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் இளைஞன் கீழே குதித்துள்ளார். கீழே விழுந்தவர் கொள்கலன் அறையின் கூறையின் மீது அவர் விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகி்னறது.

பின்னர் இந்த நபர் நேற்று காலை 8 மணியளவில் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதான ஜானக கோமஸ் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதல் காரணமாக அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பொலிஸ் நிலையத்தினுள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.