கேரளா வயநாடு மாவட்டத்தில் புதுமலா கிராமத்தில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு 24 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் இப்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்று கேரளா தொலைக்காட்சிச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இடிபாடுகளில் சுமார் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வயநாடு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.அஜயக்குமார் தனியார் ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்த போது, “இந்த மாவட்டத்தைத் தாக்கும் பயங்கரமான நிலச்சரிவாகும் இது. மிகப்பெரிய மலை ஒன்று அடித்துச் சென்றதில் அது ஆறாக மாறியுள்ளது, இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை” என்றார்.
வயநாடு மாவட்டத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள புதுமலாவில் நிலச்சரிவு வியாழனன்று ஏற்பட்டது, மலையின் ஒரு பகுதி சரிந்து கோயில், மசூதி, வீடுகள் மற்றும் சில வாகனங்கள் மீது விழுந்துள்ளது. மேப்படி பஞ்சாயத்தில் உள்ள புதுமலாவில் நூற்றுக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தைச் சேர்ந்த தேயிலைத்தோட்டத்தின் 100 ஏக்கராக்கள் அழிந்தன. தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளும் நிலச்சரிவில் சிக்கியது.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த நிலச்சரிவை, கேரளாவின் மிகப்பெரிய பயங்கர நிலச்சரிவு என்று வர்ணித்துள்ளார். நிலச்சரிவுக்குக் காரணம் கடந்த 24 மணி நேரத்தில் புதுமலாவில் 37 செமீ மழை பெய்துள்ளதே.
இந்நிலையில் இந்த நிலச்சரிவிலிருந்து தப்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கோபாலன் தான் நேரில் கண்ட நிலச்சரிவு பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வர்ணித்த போது, “ஒட்டுமொத்த மலையும் உருண்டு வருவதைப் பார்த்தேன்.
அருகில் உள்ள கடையில் மெழுகுவர்த்திகள் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என் மீது மின் ஒயர் ஒன்று விழுந்ததில் அதிர்ந்தேன்.
பிறகு பயத்தில் ஓடி உயரமான இடத்துக்குச் சென்றேன். அப்போதுதான் ஒட்டுமொத்த மலையும் கீழே உருண்டு வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
பாறைகளுடன் தேயிலைத் தோட்டம் ஒன்றும் உருண்டு கீழ் நோக்கி பாய்ந்து வந்தது. என் மனைவியை உயரமான நிலப்பகுதிக்குச் செல்லுமாறு கூறினேன். அவளும் பாதுகாப்பானாள். நாங்கள் தப்பியது பெரும் அதிர்ஷ்டமே” என்றார்.