சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், அடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் நாளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பில் தங்கியிருக்கும் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும் வணிக சமூகத்தினர், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்சை, சிறிலங்கா அதிபர் சந்திக்கமாட்டார் எனக் கூறப்படுகிறது.
கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் நேற்றிரவு கொழும்பு திரும்பினார்.
எனினும் அவருக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் எந்த சந்திப்பு நிகழ்ச்சி நிரலும் இல்லை என அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.