தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஆங்காங்கே நிலச்சரிவு என மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த 4ஆம் திகதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
பல இடங்களிலும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 233 முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினருடன், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு காரணமாக வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பவர்களுக்கு, ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பலியான நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கோர தாண்டவம் ஆடி வருகிறது.