மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பல புதிய சாதனைகளை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷிகார் தவான் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய கோஹ்லி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஜாவித் மியாண்டட் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எடுத்திருந்த 1930 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி அரைசதம் கடந்தார். மறுமுனையில் ரோகித் ஷர்மா (18) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 20 ஓட்டங்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். எனினும் விராட் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இவர் ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக வேகமாக 2000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் 34 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இந்தியாவின் ரோகித் ஷர்மா படைத்திருந்த சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். ரோகித் ஷர்மா அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 37 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்திருந்தார்.
இதன்பின்னர் விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனிடையே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 42 சதத்தை பதிவு செய்தார் கோஹ்லி. இதன்மூலம் விராட் கோஹ்லி மற்றொரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதாவது அணித்தலைவராக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விராட் கோஹ்லி 6 சதங்கள் அடித்துள்ளார்.
அத்துடன் இந்தப் போட்டியில் அடித்த ஓட்டங்களின் மூலம் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் அதிக ஓட்டங்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
விராட் கோஹ்லி 120 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஒரு போட்டியிலேயே விராட் கோஹ்லி அதிக சாதனைகளை பதிவு செய்துள்ளார்.