பதுங்கியிருக்கும் குற்றவாளி: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

சிறார் துஸ்பிரயோக வழக்கில் தேடப்படும் ஜேர்மானிய குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜேர்மனியின் Lower Saxony பகுதி பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் எரிக் ஜே என்ற 58 வயது நபர் சிறார்கள் மீது மிக மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருப்பதாகவும், கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ் மற்றும் ஜேர்மனி எல்லையில் அவர் தென்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Lower Saxony பகுதியிலேயே அவர் மீது அதிக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அவர் மீதான புகார்கள் குவிந்த நிலையில், அங்கிருந்து மாயமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1.73 மீற்றர் உயரம் கொண்ட எரிக் கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர் எனவும், ஆனால் இந்த காலகட்டத்தில் அவரது பழக்க வழக்கங்கள் மற்றும் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய எரிக், தற்போதைய தேவைகளுக்காக சிறிய வேலைகளில் ஈடுபடலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எரிக் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.